×

சென்னை மூவரசன்பட்டு சிவன்கோயில் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா; நீரில் மூழ்கி 5 பேர் பலி: போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் விசாரணை

சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது, மூவரசன்பட்டு குளத்து நீரில் நின்று பாராயணம் ஓதும் போது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 20 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் மூவரசன்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூரில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின் போது, தீர்த்த வாரி திருவிழா வெகு விமரிசையாக கோயில் நிர்வாகம் சார்பில் எடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முதல் தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கால பூஜைகளுடன் விழா நடந்து வருகிறது.

அப்பகுதியில் புகழ்பெற்ற கோயில் என்றாலும், தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு குளம் கிடையாது. இதனால் கோயில் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும், பழவந்தாங்கல் அருகே உள்ள மூவரசன்பட்டில் உள்ள கெங்கையம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஊராட்சி குளத்தில் தான் கோயில் விழாவுக்கான தெப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அதன்படி தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட குருக்கள் அடங்கிய குழு இன்று காலை மூவரசன்பட்டில் உள்ள ஊராட்சி குளத்திற்கு வந்தனர். குளத்தில் தண்ணீர் அதிகளவில் இருந்தது. பின்னர் நடைபெறும் தெப்ப விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் குளத்தில் இறங்கி படித்துறையில் நின்றபடி மார்பளவு தண்ணீரில் இறங்கி குருக்கள் பாராயணம் ஓதும் போது, ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கி எழுந்துள்ளனர்.

அப்போது கடைசியாக பாராயணம் ஓதும் போது அனைவரும் ஒன்றாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா(24), மடிப்பாக்கத்தை சேர்ந்த ராகவன்(18), கீழ்க்கட்டளை யோகேஸ்வரன்(23), நங்கநல்லூரை சேர்ந்த பணேஷ்(20) ஆகியோர் தண்ணீரில் இருந்து மீண்டும் வெளியே வரவில்லை. இதனால் சக குருக்கள் அனைவரும் அலறி அடித்து உதவி கேட்டு கத்தினர். அப்போது மூவரசன்பட்டு பகுதியில் உள்ள மக்கள் கோயில் குளத்தில் இறங்கி அனைவரையும் தேடினர். ஆனால் யாரும் கிடைக்க வில்லை. பிறகு கடும் போராட்டத்திற்கு பிறகு மக்கள் குளத்தில் மூழ்கிய 5 பேர் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழவந்தாங்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 5 பேருக்கு முதல் உதவி அளித்தனர். ஆனாலும், அவர்கள் தண்ணீரை அதிகளவில் குடித்து இருந்ததால் யாரும் சுய நினைவு இல்லாமல் இருந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது, 5 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து 5 பேர் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சம்பவம் நடந்த மூவரசன்பட்டு குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிக்கு சொந்தமான குளம் தூர்வாரப்பட்டு குண்டும் குழியுமாக இருந்துள்ளது. பிறகு மழையால் குளத்தில் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் குளத்தை சமமாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் குளத்தில் இறங்கி 50 குருக்கள் பாராயணம் செய்யும் போது, எதிர்பாராத வகையில் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றதாலும், உயிரிழந்த 5 பேருக்கும் நீச்சல் தெரியாததாலும் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. 5 குருக்கள் உயிரிழந்த தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூவரசன்பட்டு குளத்திற்கு வந்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை மூவரசன்பட்டு சிவன்கோயில் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா; நீரில் மூழ்கி 5 பேர் பலி: போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dirwari festival ,Chennai ,Muvarasanthu Shivankoil pool ,Police Commissioner ,Sankarjiwal ,Dharmalingeswarar Temple ,Nanganallur ,Bankuni Utrtru ,Movarasanputtu ,Seerwari festival ,Movarasanthu Shivankoil ,Commission ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...